கண்ணீரில்லாக் காதல் கண்பட்டுப் போகும் என..
July 22, 2013
ஏன் உன்னைக் காதலிக்கிறேன்?
என்னுள்ளே ஒரு விடையில்லா வினா!
உன்மேல் நான் கொண்ட காதலுக்கு
காரணங்கள் கிடைக்கும் வரையில்
கொஞ்சம் பழக முடியுமா?
என்றுன்னைக் கேட்ட போது,
இமைகள் மெல்ல மூடித் திறந்து
சம்மதம் எனச் சொல்லிச் செல்ல
பின்தொடர்ந்து சென்றது என் குரல்!
இமைகளுக்குள்ளே உன்முகத்தை
எப்பொழுதே வரைந்து விட்டேன்!
கண்மூடினாலும் உன் முகமே என் விழிகளில்!
உன் பெயரால் உருவான
கவிதை ஒன்றை உனக்குப் பரிசளிக்க,
உன் உதட்டுச் சாயம்
என் கன்னத்தில் எழுதியது காதல் என்று!
கண்ணீரில்லா காதல்
கண்பட்டுப் போகுமென
என் கண்ணை வருத்திகொண்டேன்
துடைக்க நீ வருவாய் என எண்ணி,
நீயும் வந்தாய் கண்ணீருடன்!
காரணம் தேடி வந்த எனக்கு
காரணம் ஒன்றும் கிடைக்கவில்லை!
ஒரு தலைக்காதல் இருதலையாக
உந்தன் காதல் கிடைத்தது.,
கண்டேன் இப்போது,
உண்மைக் காதலுக்குக் காரணம்
எதுவும் இல்லை என்று!